Remembrance Day நிகழ்வில் காவல்துறை அதிகாரி போல் வேடமிட்ட பெண்ணுக்கு சிக்கல்!

ctvnews

கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெற்ற நினைவேந்தல் தின (Remembrance Day) நிகழ்வில், காவல்துறை அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய 34 வயதுப் பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்டரி சதுக்கத்தில் (Victory Square) அமைந்துள்ள நினைவுத் தூபியில் புதன்கிழமை நடைபெற்ற 102 ஆவது நினைவேந்தல் நிகழ்வில், இராணுவச் சீருடை பாணியிலான ஆடைகள், பாதுகாப்புக் கவசம் மற்றும் காவல்துறை இலச்சினைகளுடன் (Police-style badge) சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற அப்பெண்ணை வான்கூவர் காவல்துறையினர் (Vancouver Police Department) அவதானித்துள்ளனர்.

அவரைக் கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து போலித் துப்பாக்கி (Replica firearm) ஒன்று கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 15,000 பேர் பங்கேற்ற இந்த முக்கிய பொது நிகழ்வில் பாதுகாப்புக்காக 120 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் பொது நிகழ்வுகளில் காவல்துறையின் பிரசன்னம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் காவல்துறைப் பேச்சாளர் கான்ஸ்டபிள் மேகன் லூயி (Const. Megan Lui) வலியுறுத்தியுள்ளார்.

Previous articleBrampton – Stellantis விற்பனை விவகாரம்: வழக்குத் தொடர தயாராகும் கனடா அரசு!
Next articleஉலோகத் துகள்கள் கலப்பு : அச்சத்தால் கனடாவில் பிரபல பியர் வகைகள் மீளழைப்பு!