ஒன்ராறியோவின் (Ontario) பிராம்ப்டன் (Brampton) நகரிலுள்ள தனது வாகன உற்பத்தி ஆலையை பாதுகாப்புத் துறை நிறுவனமான ரோஷெலுக்கு (Roshel) விற்பனை செய்ய ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியைத் திரும்பப் பெற வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) எச்சரித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிகளை மீறியதாக வியாழக்கிழமை ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனத்திற்கு அரசாங்கம் சார்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் கனடா (Stellantis Canada) தலைமை நிர்வாக அதிகாரி ட்ரெவர் லாங்லி (Trevor Longley), அரசாங்க நிதியுதவியான 24 மில்லியன் டொலரைத் தாமாக முன்வந்து திருப்பித் தரவுள்ளதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்புகளைத் தொடர்ந்து, ஜீப் காம்பஸ் (Jeep Compass) உற்பத்தியை இல்லினாய்ஸிற்கு (Illinois) மாற்றியதால் 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இந்த விற்பனைத் தீர்வு முழுமையானதல்ல எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) விமர்சித்துள்ளதுடன், தொழிலாளர்களின் வேலை உத்தரவாதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, இந்த விற்பனைத் தீர்மானம் தமக்குப் பெரும் ஏமாற்றமளிப்பதாக யூனிபோர் (Unifor) தொழிற்சங்கத் தலைவர் லானா பெய்ன் (Lana Payne) தெரிவித்துள்ளார்.
