Ontario-வின் Pickering அணுமின் நிலையத்தில் சுமார் 26.8 பில்லியன் டொலர் செலவில் மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Ontario மாகாணத்தின் எதிர்கால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்திக்கு முக்கியத்துவம் வழங்க Premier Doug Ford தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள நிலையில், Pickering அணுமின் நிலையத்தின் நான்கு அணு உலைகள் தற்போது சேவையிலிருந்து படிப்படியாக நிறுத்தப்படுகின்றன.
முழுமையான மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளன.
இந்தப் பணிகள் காரணமாக குறித்த நான்கு அணு உலைகளும் சுமார் 10 ஆண்டுகள் வரை மின்சார உற்பத்தியிலிருந்து விலகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர், Pickering அணுமின் நிலையத்தின் செயல்பாட்டு ஆயுட்காலம் மேலும் 38 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது.
இதன்மூலம் சுமார் 22 லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என Ontario அரசு தெரிவிக்கிறது.
இந்தத் திட்டத்தில் 1,520 எரிபொருள் வழித்தடங்கள், 48 கொதிகலன்கள் மாற்றப்படுவதுடன், சுமார் 1.5 கிலோமீற்றர் நீளமான ஆழ்கடல் நீர் உட்கொள்ளும் அமைப்பும் கட்டப்படவுள்ளது.
இந்தத் திட்டம் சுமார் 30,500 வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும், திட்டத்திற்கான செலவின் பெரும்பகுதி Ontario-விலேயே செலவிடப்படும் என்றும் மின்சக்தி அமைச்சர் Stephen Lecce தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அணு உலைகள் நீண்டகாலம் செயல்படாமல் இருப்பதால் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது அதிகரித்து, பசுமைக்குடில் வாயு வெளியேற்றமும் உயரக்கூடும் என Environmental Defence கவலை வெளியிட்டுள்ளது.
