Toronto-வின் Scarborough பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு வாகனத் தரிப்பிடம், வீடற்ற நிலையில் வாழும் மக்களுக்கான சிறிய வீடுகள் கொண்ட குடியிருப்பாக மாற்றப்படவுள்ளது.
Danforth மற்றும் Birchmount வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை, Toronto-வைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான Tiny Tiny Homes முன்னெடுத்து வருகிறது.
இந்த இடம் Sefonias Catering நிறுவனத்திற்குச் சொந்தமானது. பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தை, ஆண்டுக்கு வெறும் ஒரு டொலர் வாடகையில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
திட்டத்தை முழுமையாக நிறுவுவதற்கு சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் தேவைப்படுவதாக அமைப்பின் நிறுவனர் Ryan Donais தெரிவித்துள்ளார்.
இதுவரை தேவையான தொகையின் சுமார் 20 வீதம் நன்கொடைகள் மற்றும் பொருள் உதவிகள் மூலம் கிடைத்துள்ளது.
இந்த இடத்தில் தலா 96 சதுர அடி பரப்பளவு கொண்ட, செல்லப்பிராணிகளையும் அனுமதிக்கும் 10 சிறிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும் கழிப்பறை, குளியலறை வசதிகள், சமூக நிகழ்ச்சிகளுக்கான இடம், நிர்வாக அலுவலகம், சமூக சேவை அலுவலகங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன.
வார நாட்களில் சமூகப் பணியாளர் ஒருவர் அங்கு இருந்து, குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ சேவை, நிரந்தர வீடு உள்ளிட்ட தேவையான உதவிகளைப் பெற வழிகாட்டவுள்ளார்.
அதேவேளை, அங்கு வசிப்பவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை Sefonias Catering வழங்கவுள்ளது.
“Brent’s Place” என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் குடியிருப்புக்கு தயார்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கட்டிட விதிமுறைகள், நிலப் பயன்பாட்டு விதிகள் உள்ளிட்ட அனைத்து சட்டத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளதால், திட்டம் தற்போது Toronto நகர நிர்வாகத்தின் ஆய்வில் உள்ளது.
இந்தத் திட்டத்தின் இறுதி நோக்கம், வீடற்ற நிலையில் உள்ளவர்களை நிரந்தர வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு இடைக்காலப் பாலமாக செயல்படுவதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.










