Toronto பியர்சன் விமான நிலையத்தில் (Pearson Airport) உள்ள ஊழல் மிக்க ஊழியர்களால், அப்பாவிப் பயணிகளின் பொதி அடையாள அட்டைகள் போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் மாற்றப்பட்டதால், இரண்டு டசினுக்கும் மேற்பட்ட கனடியர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு கடும் இன்னல்களைச் சந்தித்துள்ளனர்.
இதன்படி, பிலிப்பைன்ஸ் (Philippines) சிறையில் 24 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட கிரேஸ் மெரானோ (Grace Merano), ஜப்பான் (Japan) நரிட்டா விமான நிலையத்தில் (Narita Airport) தடுத்து வைக்கப்பட்ட நவோமி (Naomi) மற்றும் பார்படாஸில் (Barbados) விசாரணைக்கு உள்ளான 77 வயதான லீலா டிரேக்ஸ் (Leila Drakes) உள்ளிட்ட 11 பேர் தற்போது இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்தப் பாதிப்புகளுக்கு விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த இழப்பீட்டையே வழங்க முன்வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி போல் மில்லர் (Paul Miller), ஒவ்வொரு வழக்கிற்கும் 1 இலட்சம் முதல் 1 மில்லியன் டொலர் வரை இழப்பீடு கோரியுள்ளார்.
குறித்த விமான நிறுவனங்கள், போக்குவரத்து கனடா (Transport Canada) மற்றும் கிரேட்டர் ரொறன்ரோ விமான நிலைய அதிகாரசபை (Greater Toronto Airports Authority) ஆகியவற்றுக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதேவேளை, மூன்றில் இரண்டு பங்கு கனடியர்கள் இந்தப் பொதி அடையாள அட்டை மாற்றும் மோசடி குறித்து அச்சம் வெளியிட்டுள்ளதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
