Greenland பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு நிரந்தரமான அணுகல் மற்றும் முக்கிய ராணுவ அதிகாரங்கள் வழங்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
Denmark மற்றும் Greenland பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக Trump தனது சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் கீழ், Greenland பகுதியில் அமெரிக்காவின் எதிரி நாடுகள் ராணுவத் தளங்களை அமைப்பதற்கும், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Greenland பாதுகாப்புக்காக தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள முடியும் என்றும், இந்த ஏற்பாட்டிற்கு காலாவதி இல்லை என்றும் Trump கூறியுள்ளார்.
Greenland பகுதியில் ஏற்கனவே அமெரிக்காவின் விண்வெளிப் படைத் தளம் ஒன்று இயங்கி வருகிறது. தற்போது அங்கு அமெரிக்க ராணுவத்தின் இருப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Denmark பிரதமர் அலுவலகம், இந்த உடன்பாடு வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, Denmark மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் இன்னும் சில பதற்றங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு Greenland கடற்பகுதியில் Denmark நடத்திய ராணுவப் பயிற்சியில் கனடாவின் Robert Hampton Gray கப்பலும் பங்கேற்றது. வழக்கமாக இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்கும் அமெரிக்கா, இம்முறை அழைக்கப்படவில்லை என கனேடிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Marco Rubio, இந்த உடன்பாடு Greenland தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்புக் கவலைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைக்கப்படுமா என்பது உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
