GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!

Toronto-வில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த GO ரயிலில், மது அருந்தியதுடன் பயணிகளை தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் மூன்று பதின்ம வயது சிறுமிகள் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

Durham காவல்துறையின் தகவலின்படி, கடந்த சனிக்கிழமை GO ரயிலில் பயணித்த மூன்று பேர், ஐந்து பதின்ம வயது சிறுமிகள் கொண்ட குழுவினரால் தொந்தரவு செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ரயிலில் ஏனைய பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நடந்துகொள்ளுமாறு ஒருவர் கேட்டதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்போது சிறுமிகள் வாய்மொழி மிரட்டல் மற்றும் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் பெண் பயணி ஒருவரை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் Whitby GO நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுமிகள், பயணிகளை நோக்கி மதுபோத்தல் ஒன்றை வீசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

காணொளி ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் தகவல்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து Oshawa-வைச் சேர்ந்த 13, 15, 16 வயதுடைய மூன்று சிறுமிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று சிறுமிகளும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles