Durham பிராந்தியத்தில் உள்ள ServiceMaster எனும் துப்புரவு சேவை நிறுவனத்தில், சுமார் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நிறுவனத்தின் செயல்பாட்டு முகாமையாளராக (Operations Manager) பணியாற்றிய பெண் ஒருவர், இந்தத் திட்டமிட்ட மோசடியை முன்னின்று நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஊழியர்களின் ஊதியத்தைத் திசைதிருப்புதல், குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுதல் மற்றும் செய்யாத வேலைகளுக்கு போலியான ஒப்பந்ததாரர் விலைப்பட்டியல்களை (Subcontractor invoices) சமர்ப்பித்தல் ஆகிய வழிகளில் இந்த மோசடி நடந்துள்ளது.
2015 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 270 போலி காசோலைகள் மூலம் $3 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த மோசடிப் பணம் பல்வேறு வங்கிகள் மற்றும் சர்வதேச அளவிலும் கைமாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் $5,000-க்கு அதிகமான மோசடி மற்றும் நிதிச் சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் Duaa Hadweh (53) என்பவர் மீது போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தப்பியோடிய 5 பேரையும் தேடும் பணியில் Durham காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
