“கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது!”
அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் – அதாவது சுமார் 28 பில்லியன் கனடிய டொலர் பெறுமதியான பொருட்களுக்கு 50 சதவீத வரியை சனிக்கிழமை முதல் அமுல்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்போதைக்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல… “அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு கனடாவும் Dollar for Dollar அடிப்படையில் பதிலடி கொடுக்கும்” என Carney தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்காவின் புதிய வரிகளால் ஏற்படும் மதிப்புக்கு இணையான அளவில் அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா எதிர்வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த வர்த்தக நிபந்தனைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றவை, பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், எந்த ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் அவை கேள்விக்குள்ளாக்குவதாகவும் Carney கூறியுள்ளார்.
புதிய 50 சதவீத அமெரிக்க வரிகள், plywood, மதுபானம், மின்சார உபகரணம், hockey பொருட்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கனடிய பொருட்களை பாதிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு வரை இரு நாடுகளும் ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தைகள் முறிந்திருப்பது Canada–U.S. வர்த்தக உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கனடாவின் எதிர்வரிகள் எந்த அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்ததாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
