ஒன்ராறியோவின் பிராம்ப்டன் (Brampton, Ont.) பகுதியில் அமைந்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) கார் தயாரிப்புத் தொழிற்சாலையை, கனடாவின் ரோஷெல் (Roshel) நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தப் பேச்சுகளில் கனடிய மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்த விற்பனையை பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் தொழிற்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) “துரோகம்” என பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், இக்கூட்டங்கள் குறித்து அறிந்த நபர்களின் கூற்றுப்படி, மத்திய அரசு இப் பேச்சுகளில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், விற்பனையைத் தடுக்கவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
அதேவேளை, அரசாங்கம் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளைத் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே, பிராம்ப்டன் தொழிற்சாலைக்காகப் பெற்ற 24 மில்லியன் டாலர் நிதி உதவியைத் திரும்பச் செலுத்த ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
