கனடாவின் (Canada) வான்கூவர் தீவின் (Vancouver Island) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள செபாலோஸ் (Zeballos) கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 125 குடியிருப்பாளர்களைக் கொண்ட அந்த கிராமத்தில் உள்ள Pandora Crescent மற்றும் Maquinna Avenue பகுதிகளைச் சேர்ந்த 22 வீடுகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தியோகபூர்வ உத்தரவு (Evacuation order) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அதிகாலை வேளையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததாக Ehattesaht First Nation அமைப்பின் தலைவரான சைமன் ஜான் (Simon John) தெரிவித்துள்ளார்.
மேலும், வீடுகளுக்கு மேலே சேறு மற்றும் இடிபாடுகள் சிக்கியுள்ளதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகிறது.
தற்போது அந்தப் பகுதியில் நிலச்சரிவு தொடர்பான ஆய்வுகள் (Geotechnical assessment) மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர கால நடவடிக்கை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
