Ontario-வில் மருத்துவச் சீட்டு இன்றி OTC கருவிகள்: நிபுணர்களின் கவலை!

கனடா (Canada) நாட்டின் Ontario மாகாணத்தில், லேசானது முதல் மிதமான செவித்திறன் இழப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி, சுலபமாக வாங்கக்கூடிய Over-The-Counter (OTC) செவிப்புலன் கருவிகளை விற்பனை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது.

இதன் மூலம் Apple AirPods போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளையும் செவிப்புலன் கருவிகளாகப் பயன்படுத்த வழி பிறந்துள்ளது.

Ontario Association of Professional Audiology (OAPAC) தலைவர் Sanj Sukumaran, காது கேளாமை என்பது சாதாரண மெழுகு அடைப்பாக இருக்கலாம் அல்லது கட்டிகள் போன்ற தீவிரமான மருத்துவப் பிரச்சினையாகவும் இருக்கக்கூடும் என்பதால், மக்கள் தாங்களாகவே நோயைக் கணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

College of Audiologists and Speech-Language Pathologists of Ontario (CASLPO), இத்தகைய கருவிகள் மலிவான மற்றும் எளிமையான விருப்பமாக இருந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இது பொருந்தும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,  குழந்தைகள் மற்றும் மருத்துவப் பரிசீலனை தேவைப்படுவோருக்கு இது உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் நோயாளிகளுக்குக் கூடுதல் தேர்வுகளை வழங்குவதோடு, பரிந்துரைக்கப்பட்ட கருவிகளுக்கான Assistive Devices Program நிதி உதவியைப் பாதிக்காது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இத்தகைய கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles