1.76 இலட்சத்திற்கும் அதிகமான ரகசியத் தகவல்கள் கசிவு: Toronto Crime Stoppers சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

கனடாவின் தொண்டு நிறுவனமான Toronto Crime Stoppers, தரவு மீறல் (Data Breach) காரணமாகப் புதிய குற்றவியல் தகவல்களைப் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

2022 ஜனவரி முதல் 2025 நவம்பர் வரையிலான காலத்தில் பெறப்பட்ட 176,859 ரகசியத் தகவல்களும், அவற்றில் இடம்பெற்றிருந்த 14,973 நபர்களின் பெயர்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவர் Sean Sportun வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல்களைச் சேகரிக்கும் P3 மென்பொருளைக் கொண்ட Navigate360 நிறுவனத்தின் மூலமே இத் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தகவல் வழங்கி வந்த மக்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்கத் தவறியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இணையதளம், தொலைபேசி மற்றும் செயலிகள் வாயிலாகத் தகவல்களைச் சேகரிக்கும் சேவைகள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.

Toronto Police, இச்சேவையைப் பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்ததுடன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் குற்றங்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க விரும்பினால், Toronto பொலிஸாரை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் கண்டறியப்படும் வரை பொதுமக்கள் எவ்வித தகவல்களையும் அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles