ஒன்டாரியோ தனியார் கல்லூரிகளுக்கான நிதி உதவி நிறுத்தம்: புத்தாண்டின் பின்னரே மீண்டும் தொடங்கும்!

கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்திலுள்ள அனைத்துத் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்குமான மாணவர் நிதி உதவித் திட்ட (OSAP) நிதியுதவி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலை புத்தாண்டு வரையாவது தொடரும் என மாகாணக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறை அமைச்சர் நோலன் குவின் (Nolan Quinn) அறிவித்துள்ளார்.

ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் (OSAP) நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளைத் தடுக்கவும், முறையான அங்கீகார முறையை மீண்டும் வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் சரிபார்ப்பு அமைப்புகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அமலுக்கு வரும் என்பதால், அதுவரை நிதி விடுவிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

கேபிஎம்ஜி (KPMG) நிறுவனம் மேற்கொண்ட முதற்கட்ட தணிக்கையில் எழுந்த தீவிர கவலைகளைத் தொடர்ந்து, இது குறித்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறையின் (OPP) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எட்டுத் தனியார் தொழிற்கல்லூரிகளில் (Career Colleges) நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிதி நிறுத்த நடவடிக்கையால் டிரிலியம் கல்லூரி (Trillium College) போன்ற பல தனியார் கல்வி நிறுவனங்களின் வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பல மாணவர்கள் தங்களின் படிப்பை குறித்த காலத்தில் முடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles