கனடாவிலிருந்து பிரிவதா? ட்ரம்பின் வரிகளால் கியூபெக்கில் மாறும் மனநிலை

கனடாவிலிருந்து தனிநாடாகப் பிரிய வேண்டும் என்ற கியூபெக்கின் நீண்டகால அரசியல் கோரிக்கை தற்போது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.

அதற்குக் காரணமாக இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

கனடிய எஃகு உள்ளிட்ட பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கடுமையான வரிகளும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது தொடர்பான அவரது கருத்துகளும், கியூபெக்கில் பிரிவினைக்கு ஆதரவளித்த சிலரின் நிலைப்பாட்டையே மாற்றியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடிய எஃகு மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, கியூபெக்கில் இயங்கும் எஃகு உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒரு வாரத்திற்குள் தனது ஆர்டர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இழந்தது.

இதையடுத்து புதிய பணியாளர் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டதுடன், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டு, நிறுவனத்தின் சுமார் 140 பணியாளர்கள் வேலை இழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கியூபெக்கைச் சேர்ந்தவர்கள்.

எஃகு மற்றும் அலுமினியம் போன்ற அமெரிக்க சந்தையை அதிகம் சார்ந்த தொழில்கள் கியூபெக்கில் அதிகமாக இருப்பதால், ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கனடிய மாகாணங்களில் ஒன்றாக கியூபெக் பார்க்கப்படுகிறது.

இந்த பொருளாதார அழுத்தம், வழக்கமாக பிரிவினை உணர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இம்முறை அதற்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளது.

கியூபெக் தனிநாடாக வேண்டும் என்ற கருத்துக்கான ஆதரவு தற்போது சுமார் 30 சதவீதமாக குறைந்துள்ளது. இது பல தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த அளவுகளில் ஒன்றாகும்.

1995ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது கியூபெக் சுதந்திர வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவதற்கு எதிரான தரப்பு மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் தற்போது சூழல் வேறுபட்டுள்ளது.

ட்ரம்பின் வர்த்தகப் போரும், கனடாவை 51வது மாநிலமாக்குவது தொடர்பான அவரது கருத்துகளும், கியூபெக்கில் கனடிய தேசிய உணர்வை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பின்படி, கியூபெக் மக்களில் வெறும் 10 சதவீதமானவர்களே ட்ரம்பைப் பற்றி சாதகமான கருத்தைக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, கியூபெக் பிரிந்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பவர்களும் உள்ளனர். கனடாவின் மத்திய அரசு கியூபெக்கின் பிரெஞ்சு மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதார நலன்களை போதுமான அளவில் பாதுகாக்கவில்லை என்பது அவர்களின் வாதம்.

Related Articles

Latest Articles