கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளிலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் தீவிரமாக உணரப்படத் தொடங்கியுள்ளன.
பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் முதல் முறையாக கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீண்டும் கனடாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“அமெரிக்க மாநிலமாக இல்லாமலேயே, ஒரு மாநிலத்திற்குக் கிடைக்கும் நன்மைகளை கனடா விரும்புகிறது” என்று அவர் தனது Truth Social பதிவில் கூறியுள்ளார். அமெரிக்க விவசாயிகள் மீது கனடா பல ஆண்டுகளாக அதிக வரிகளை விதித்து வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் Sean Duffy, டிரம்புடன் ஒரு வர்த்தகப் போரில் ஈடுபட்டு கனடா வெற்றிபெற முடியும் என்று நினைப்பது தவறானது என்ற வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆனால் முக்கியமான திருப்பமாக, டிரம்பின் வர்த்தக அணுகுமுறைக்கு அமெரிக்காவுக்குள்ளேயே எதிர்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி Mike Pence, அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வரும் நேரத்தில் கனடாவுடன் வர்த்தகப் போர் நடத்துவது தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். வரிகள் மேலும் அதிகரித்தால், அதன் செலவுகளை இறுதியில் அமெரிக்க நுகர்வோரே எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க வணிக அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன.
Canadian Chamber of Commerce-உம் இந்த வர்த்தக மோதல் வட அமெரிக்காவின் போட்டித்திறனுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கர்களுக்கும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவின் இறுதிநேர கோரிக்கைகள் பொருளாதார ரீதியாக நியாயமற்றவை என்றும், கனடாவின் இறையாண்மை மற்றும் எதிர்கால வர்த்தக சுதந்திரத்தை பாதிக்கக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம், கனடிய Conservative கட்சியும் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்தாலும், அமெரிக்கா முன்வைத்திருந்த ஒப்பந்தத்தின் முழு விபரங்களையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என கோரியுள்ளது.
உலகின் மிக நெருங்கிய வர்த்தக உறவுகளில் ஒன்றாக இருந்த கனடா–அமெரிக்க உறவு தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது.










