Burlington பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வௌவால் ஒன்றுக்கு Rabies நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு Halton Region Public Health அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 11ஆம் திகதி Burlington-ல் கண்டெடுக்கப்பட்ட வௌவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Rabies உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு Halton Region-ல் வௌவாலில் பதிவான முதல் உறுதி செய்யப்பட்ட Rabies சம்பவமாகும்.
Rabies என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டை கடுமையாக பாதிக்கக்கூடிய வைரஸ் நோயாகும். நோய் தொற்றிய விலங்கின் உமிழ்நீர் மூலம், குறிப்பாக கடி அல்லது கீறல் வழியாக மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இது பரவக்கூடும்.
வௌவால்களின் பற்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவை கடித்திருந்தாலும் சில நேரங்களில் அது தெரியாமல் போகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
வீட்டிற்குள் வௌவால் காணப்பட்டால் அதனை கைகளால் பிடிக்கவோ வெளியேற்ற முயற்சிக்கவோ வேண்டாம் என்றும், Animal Control Services-ஐ தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாய் பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் Rabies தடுப்பூசிகள் காலத்திற்கு ஏற்றவாறு போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










