டொரொண்டோவில் அதிகரித்து வரும் வாடகைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கனடா மத்திய அரசு மிகப்பெரிய வீடமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னியும் டொரொண்டோ மேயர் ஒலிவியா சௌவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.7 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படவுள்ளது.
இந்த நிதியின் மூலம் டொரொண்டோ முழுவதும் 18-க்கும் மேற்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, 5,600-க்கும் அதிகமான புதிய வாடகை வீடுகள் கட்டப்படவுள்ளன. அவற்றில் குறைந்தது 1,800 வீடுகள் மலிவு விலை அல்லது வாடகைக் கட்டுப்பாட்டின் கீழான வீடுகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 4,500 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். நகரத்துக்குச் சொந்தமான நிலங்களும் இந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதுடன், டொரொண்டோ நகர நிர்வாகம் 530 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி மற்றும் வரிச் சலுகைகளையும் வழங்கவுள்ளது.
டொரொண்டோவில் பல ஆண்டுகளாக போதுமான வீடுகள் கட்டப்படாததும், கட்டுமானச் செலவுகள், வரிகள், அபிவிருத்திக் கட்டணங்கள் அதிகரித்ததும் தற்போதைய வீட்டு நெருக்கடிக்குக் காரணம் என மார்க் கார்னி கூறியுள்ளார்.
ஆனால், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களே மீண்டும் புதிய அறிவிப்பாக முன்வைக்கப்படுவதாக விமர்சித்துள்ளது.
இந்தப் புதிய முதலீடு உண்மையில் டொரொண்டோவின் வாடகைச் செலவுகளைக் குறைக்குமா? அல்லது மக்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










