Grand River நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்மட்டம் மற்றும் நீரோட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Grand River நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் ஆறு மணித்தியாலங்களுக்குள் 30 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என Grand River Conservation Authority தெரிவித்துள்ளது.
பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் சிற்றோடைகளின் நீரோட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும். தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கும், நகரப் பகுதிகளிலுள்ள வீதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் ஏற்படலாம்.
வேகமாகப் பாயும் நீர் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலிருந்தும் விலக்கி வைத்திருக்குமாறு குடும்பங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு எச்சரிக்கை ஆகஸ்ட் 4, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
