கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள பில்லி பிஷப் நகர விமான நிலையத்தை (Billy Bishop City Airport) விரிவாக்கம் செய்யும் ஒன்ராறியோ (Ontario) மாநில அரசின் திட்டத்தை கனடா மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஒன்ராறியோ முதலமைச்சர் டக் போர்ட் (Doug Ford) தலைமையிலான அரசு, பெரிய மற்றும் சத்தம் மிகுந்த ஜெட் விமானங்களை இயக்கும் வகையில் இந்த விரிவாக்கத் திட்டத்தை முன்மொழிந்தது.
ஆனால், பொதுமக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒலி மாசுபாடு மற்றும் வீடமைப்புத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது என கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, லிட்டில் நார்வே பார்க் (Little Norway Park) மற்றும் ஹான்லன்ஸ் பொய்ண்ட் பீச் (Hanlan’s Point Beach) போன்ற முக்கியமான பொதுவிடங்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த தீர்மானத்தை றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) வரவேற்றுள்ளார்.
மக்களுக்காகக் குரல்கொடுத்த பிரதமர் கார்னி (Prime Minister Carney) மற்றும் அமைச்சர் மெக்கின்னன் ஆகியோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்திட்டம் பொருளாதார ரீதியாக பல நன்மைகளைத் தரும் என்பதால், சுற்றுச்சூழல் மற்றும் பொதுவிடங்களைப் பாதுகாக்கும் மாற்றுத் திட்டங்களுடன் விரிவாக்கப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சிங் சர்க்காரியா (Prabmeet Singh Sarkaria) தெரிவித்துள்ளார்.
