றொரண்டோ நகரில் நடமாடும் மருத்துவ மனை முன்னோடித் திட்டம் தொடக்கம்!

கனடாவின் றொரண்டோ நகரில் வசிக்கும் எளிய மற்றும் நலிவடைந்த மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், ஒரு புதிய நடமாடும் மருத்துவ மனை (Mobile Clinic) முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வொர்க் (University Health Network – UHN) மற்றும் றொரண்டோ பொது நூலகம் (Toronto Public Library – TPL) ஆகிய அமைப்புகள் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

பெரிய வாகனத்தில் அமைக்கப்பட்ட இந்த நடமாடும் மருத்துவமனையில் ஒரு பதிவுசெய்த செவிலியர் (Registered Nurse), செவிலியர் பயிற்சி மருத்துவர் (Nurse Practitioner) மற்றும் சமூக சுகாதார ஊழியர் ஆகியோர் பணியில் உள்ளனர். குடும்ப மருத்துவர் வழங்கும் அனைத்து முதன்மைச் சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இச்சேவையைப் பெற எவ்வித அடையாள அட்டையோ அல்லது OHIP சுகாதார அட்டையோ தேவையில்லை.

மாகாண அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் இயங்கும் இந்த திட்டத்திற்காக இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தின் மதிப்பு சுமார் $200,000 டாலர்கள் ஆகும்.

தற்போது இந்த நடமாடும் மருத்துவமனை சாண்டர்சன் நூலகக் கிளையில் (Sanderson branch – Bathurst and Dundas Streets) வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இயங்கி வருகிறது.

மற்ற நாட்களில் Toronto Community Housing குடியிருப்புப் பகுதிகளில் சேவை வழங்கி வருகிறது.

UHN-இன் காட்டூசோ சமூக மருத்துவ மையத்தின் (Gattuso Centre for Social Medicine) நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஆண்ட்ரூ பூசாரி (Dr. Andrew Boozary) மற்றும் TPL-இன் மூத்த அதிகாரி ஆல்ய் வெல்ஜி (Aly Velji) ஆகியோர் கூறுகையில், “ஆரம்ப சுகாதார பாதுகாப்பு கிடைக்காத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் நகரின் பிற நூலகக் கிளைகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்,” எனத் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles