கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையில் 63 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்டாரியோ மாகாண காவல்துறை (Ontario Provincial Police – OPP) மற்றும் 25 பொலிஸ் அமைப்புகள் இணைந்து ‘பிராஜெக்ட் டைம்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த விரிவான நடவடிக்கையை மேற்கொண்டன.
இத்திட்டத்தின் மூலம் 264 குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட்டு, 213 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளை உருவாக்குதல், வைத்திருத்தல் மற்றும் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 51 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கணினி, கைபேசி உட்பட 814 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சமூகத்தில் “பொறுப்பான மற்றும் அதிகாரமிக்க பதவிகளில்” இருந்தவர்கள் என்றும், 8 பேர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த OPP ஆணையர் தோமஸ் கேரிக் (Thomas Carrique), “ஒவ்வொரு குழந்தையும் இணையத்திலும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருக்கத் தகுதியானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான 154 விசாரணைகள் இன்னமும் தொடர்வதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
