அமெரிக்க தயாரிப்பு வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால் பொருட்களுக்கு கனடா பாரபட்சமான தடைகளை விதிப்பதாகக் கூறி, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $20 பில்லியன் (20 billion dollars) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) 50% சுங்கவரிகளை அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 19 ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள இந்தப் புதிய சுங்கவரிகள் வைன், சீமெந்து, ஐஸ் ஹாக்கி உபகரணங்கள், பால் பொருட்கள், தளபாடங்கள், ஆடைகள் மற்றும் செயற்கை முடிகள் (Wigs) உட்பட பல பொருட்களுக்குப் பொருந்தும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), டிரம்பின் இந்த நடவடிக்கை வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை (CUSMA) மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தமது அரசாங்கம் தீவிரமாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் பால் விநியோக முகாமைத்துவம், கார்களுக்கான இறக்குமதி வரிகள் மற்றும் மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனை நிறுத்தப்பட்டது போன்றவற்றையே இந்த வரிகளுக்குக் காரணமாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
