2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுகள் நெருங்கி வரும் வேளையில், கனடாவின் இரு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவர் இடையே டிக்கெட் விலையில் நிலவும் அசுர வித்தியாசம் நிலவுகிறது.
ஒரே சுற்றின் போட்டிகளாக இருந்தாலும், எந்த அணிகள் மோதுகின்றன என்பதைப் பொறுத்து ஒரு நகரத்தில் டிக்கெட் விலை சரிந்தும், மற்றொரு நகரத்தில் வரலாறு காணாத அளவில் உயர்ந்தும் காணப்படுகிறது.
வான்கூவர் நகரைப் பொறுத்தவரை, நாக்-அவுட் சுற்றின் ‘சுற்று-32’ (Round-of-32) போட்டியில் கனடா அணி விளையாடும் என்ற அதீத எதிர்பார்ப்பில் உள்ளூர் ரசிகர்கள் கடந்த வாரம் வரை டிக்கெட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். ஆனால், சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா தோல்வியடைந்தது. சுவிசர்லாந்து அணியுடனான போட்டியில் கனடா வெற்றிபெற்றிருந்தால், கனடா அணி அல்ஜீரியா அணியை எதிர்கொண்டிருக்கும். எனினும், தற்போது 32 அணிகளைக் கொண்ட சுற்றில் சுவிசர்லாந்து – அல்ஜீரியா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வன்கூவரில் நடைபெறவுள்ளது.
இதனால் அங்கு டிக்கெட்டுகளுக்கான மவுசு குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் சுமார் $2,100 டாலராக இருந்த குறைந்தபட்ச டிக்கெட் விலை, தற்போது $700 டாலராகக் தலைகீழாகக் குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, டொராண்டோ நகரில் டிக்கெட் விலைகள் தற்போதே விண்ணைத் தொட்டுள்ளன. அங்கு நடக்கவிருக்கும் நாக்-அவுட் போட்டியில் உலகின் கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும், லூகா மோட்ரிச்சின் குரோஷியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
41 வயதான ரொனால்டோ விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் இது என்பதால், அவரது ஆட்டத்தை நேரில் காண உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் டொராண்டோ நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, டொராண்டோவில் ஒரு டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை சுமார் $2,550 டாலராக உயர்ந்துள்ளது. இது வான்கூவர் நகர டிக்கெட் விலையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
சொந்த நாட்டு அணி வெளியேறியதால் வான்கூவரில் டிக்கெட் சந்தை மந்தமாகியுள்ள நிலையில், சர்வதேச நட்சத்திரங்களின் வருகையால் டொராண்டோவில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து பிளாக் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.










