கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தக ரீதியான பதற்றங்கள் நிலவி வருகின்றன.
இந்தச் சூழலிலும், ஒன்ராறியோவின் செயின்ட் கேத்தரின்ஸ் (St. Catharines) நகர மக்கள், எல்லை தாண்டிச் சென்று அமெரிக்காவின் ‘பபலோ சேபர்ஸ்‘ ஹாக்கி அணியைத் தீவிரமாக ஆதரித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளே-ஆப் (Playoffs) போட்டியில், பபலோ சேபர்ஸ் அணி போஸ்டன் புரூயின்ஸை (Boston Bruins) 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியதைக் கனேடிய ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதால், ரசிகர்கள் பெரும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்.
றொரண்டோ மேப்பிள் லீப்ஸ் (Toronto Maple Leafs) அணியை விட, பபலோ அணி தங்களுக்குப் புவியியல் ரீதியாக நெருக்கமாக இருப்பதாக இந்த ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும், முன்னொரு காலத்தில் பபலோ அணி தனது பயிற்சிகளைச் செயின்ட் கேத்தரின்ஸ் நகரிலேயே மேற்கொண்டதும் இந்தத் தீவிரமான பற்றுக்கு ஒரு காரணமாகும்.
அங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் (Angus Reid Institute) நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், 72 சதவீத கனேடியர்கள் தங்கள் நாட்டு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும், இந்த எல்லைப் பகுதி மக்கள் அமெரிக்காவுடனான தங்களின் நட்புறவே விளையாட்டுக்கு முக்கியம் எனக் கருதுகின்றனர் என கூறப்படுகிறது.
அரசியல் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் தங்களின் விளையாட்டு ஆர்வத்தையோ, இரு நாட்டு எல்லைப் பகுதி மக்களிடையேயான நட்பையோ பாதிக்காது என ரசிகர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
