றொரண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்திற்குள் (Toronto South Detention Centre – TSDC) போதைப்பொருட்கள், கைபேசிகள் மற்றும் ஆபத்தான ஆயுதங்களைக் கடத்திய குற்றத்திற்காக யாது சத்தியகாந்தன் (Yathu Sathiyakanthan) என்ற சிறைக்காவலருக்கு 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் அங்கு பணியாற்றி வந்த இவர், சிறைக்குள் MDMA, ஹாஷிஷ் (Hashish) போன்ற போதைப்பொருட்கள், கைபேசிகள் மற்றும் உலோகத் தேடுபொறிகளில் (Metal detectors) சிக்காத வகையில் பீங்கான் கத்திகளை (Ceramic blades) கடத்தியுள்ளார்.
இதற்காக அவர் சுமார் $15,000 பணம் பெற்றுள்ளதையும் ஒப்புக்கொண்டார்.
2024 அக்டோபரில் கைதி ஒருவரின் அறையில் போதைப்பொருட்கள் அடங்கிய இளஞ்சிவப்பு நிற காலுறை (Socks) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சத்தியகாந்தனின் கார் மற்றும் சீருடையிலிருந்து கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஒருவரே அத்துமீறலில் ஈடுபட்டது பாரதூரமானது என நீதிபதி ஹபீஸ் அமர்ஷி (Justice Hafeez Amarshi) தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தனது செயலுக்காக வருந்திய சத்தியகாந்தன், இது ஒரு “முட்டாள்தனமான செயல்” என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளுக்குள் ட்ரோன்கள் மற்றும் உடல்களுக்குள் மறைத்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும், இதனால் கைதிகளின் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.










