கனடாவில் புதிய தொலைபேசி எண்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
டொராண்டோவில் 942 என்ற புதிய எண்ணும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு 257 என்ற புதிய எண்ணும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முன்னொரு காலத்தில் 416 என ஆரம்பிக்கும் எண் டொராண்டோவிற்கும், 604 என ஆரம்பிக்கும் எண் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும், 403 என ஆரம்பிக்கும் எண் ஆல்பெர்டாவிற்கும் என எளிதாக பகிரங்கமாக சொல்ல முடிந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருவதாக தெரியவருகிறது.
டொராண்டோ தற்போது 942 என்ற எண்ணை தனது நான்காவது பிராந்திய எண்ணாக பெற்றுள்ளது.
1993ஆம் ஆண்டில் கனடாவில் வெறும் 15 பிராந்திய எண்களே இருந்துள்ளன. ஆனால் இம்மாத இறுதிக்குள் அது 55 ஆக அதிகரிக்கவுள்ளது.
தொலைபேசி எண்கள் தற்போது கைபேசிகள் மட்டுமல்லாது, கார், டேப்லட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
எதிர்காலத்தில் 10 இலக்க எண்களில் இருந்து 11 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் நோக்கி செல்ல நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 416 என்ற எண்ணிற்கு தற்போது கேள்வி அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிதாக தொலைபேசி இணைப்புகளைப் பெற வருவோர், 416 என்று ஆரம்பிக்கும் எண்ணை தங்களின் முதலாவது தெரிவாக வைத்திருப்பதாக தொலைபேசி தொடர்புகளை விற்பனை செய்யும் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.