அமெரிக்க குடிவரவு சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள குடியுரிமையில்லாத பலர், கனடா எல்லையை நோக்கி அகதியாக குடிபுகுந்துவருவதாக மொன்ரியல் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கனடா தேசிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் திட்டங்களை டொனால்ட் ட்ரம்ப் இரத்துச் செய்ததை அடுத்து 2026 அல்லது 2027 வரை பாதுகாப்பு பெற இருந்த பலரை நாடு கடத்தும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதில் பலர் கனடாவை நம்பி புலம்பெயர ஆரம்பித்துள்ளதாக Action Committee for People Without Status என்ற அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் பிரான்ஸ் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகக் கொள்கைகளின் அச்சுறுத்தலினால் கியூபெக் எல்லையில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து புகலிடக் கோரிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 1,356 அகதி கோரிக்கை விண்ணப்பங்களும் ஏப்ரல் முதல் வாரத்தில் மட்டும் 557 அகதி கோரிக்கை விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக அந்த வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.