கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 9ஆம் திகதி கைது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் 20 வயதுடைய மாணவி எனவும் இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருளுடன் அபுதாபிக்கு சென்று அங்கிருந்து எதிஹாட் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவி கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்டு மறைத்து கொண்டுவரப்பட்ட 17 கிலோ கிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் போதைப் பொருட்களும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.