$20 மில்லியன் Pearson தங்கக் கொள்ளை வழக்கு: Air Canada சமரசம்!

Toronto Pearson விமான நிலையத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் பணக் கொள்ளை தொடர்பான முக்கியமான நீதிமன்றப் போராட்டம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் Air Canada மற்றும் பாதுகாப்பு சேவை நிறுவனமான Brink’s இடையே நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு சமரசத்தின் மூலம் முடிக்கப்பட்டுள்ளதாக Air Canada உறுதிப்படுத்தியுள்ளது.

2023 ஏப்ரலில் சுவிட்சர்லாந்திலிருந்து Toronto-வுக்கு அனுப்பப்பட்ட சுமார் 400 கிலோ தங்கமும், 53 கிலோ வங்கிநோட்டுகளும் Pearson விமான நிலையத்தில் உள்ள Air Canada cargo facility-யிலிருந்து திருடப்பட்டன.

இந்தச் சரக்கை அனுப்ப ஏற்பாடு செய்திருந்த Brink’s நிறுவனம், சம்பவத்துக்குப் பின்னர் தனது சுவிஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்திருந்தது.

மேலும், Air Canada-வின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை என்றும் Brink’s குற்றஞ்சாட்டியது.

ஆனால் வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள சரக்கு திருடப்பட்டிருந்தாலும், Air Canada சுமார் 18,000 டொலர் மட்டுமே இழப்பீடாக செலுத்த வேண்டிய பொறுப்பு உடையது என நீதிமன்றம் தீர்மானித்தது.

இதற்குக் காரணம், சரக்கை அனுப்பும் போது Brink’s அதன் முழுமையான மதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதாகும்.

சர்வதேச விமான சரக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் Montreal Convention விதிகளின்படி, மதிப்பு அறிவிக்கப்படாத சரக்குகளுக்கான விமான நிறுவனத்தின் பொறுப்பு கிலோ ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் மட்டுமே இருக்கும்.

இதனால், மொத்தமாக சுமார் 20 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் Air Canada-வின் ஆரம்ப சட்டப் பொறுப்பு சுமார் 18,000 டொலராக மட்டுமே கணக்கிடப்பட்டது.

ஆனால் Brink’s அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

“AC Secure” சேவையை பயன்படுத்தியதுடன், சரக்கு ஆவணங்களில் “valuable”, “special supervision” போன்ற குறிப்புகளும், “Gold” என்ற வார்த்தையும் பலமுறை இடம்பெற்றிருந்ததால், Air Canada-க்கு சரக்கின் உயர் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும் என்பதே Brink’s தரப்பின் வாதமாக இருந்தது.

இந்நிலையில் இரு நிறுவனங்களும் தற்போது சமரசத்திற்கு வந்துள்ளன.

ஆனால், Air Canada இறுதியாக Brink’s நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்த ஒப்புக்கொண்டது என்பது வெளியிடப்படவில்லை.

சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, நீதிமன்றத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், வழக்கைத் தொடர்ந்தால் 20 மில்லியன் டொலர் வரை இழப்பீடு செலுத்த வேண்டிய அபாயம் இருந்ததால் சமரசம் Air Canada-க்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பான முடிவாக இருந்திருக்கலாம்.

இதேவேளை, Pearson தங்கக் கொள்ளை தொடர்பான பல குற்றவியல் வழக்குகள் இன்னும் Brampton நீதிமன்றத்தில் தொடர்கின்றன. அதில் Air Canada-வின் முன்னாள் ஊழியர்கள் இருவருடன் தொடர்புடைய வழக்குகளும் அடங்குகின்றன.

கனடாவின் மிகப்பெரிய தங்கக் கொள்ளைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த Pearson Gold Heist வழக்கில், நீதிமன்றப் போராட்டத்தின் ஒரு பகுதி முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் குற்றவியல் விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை.

Related Articles

Latest Articles