150 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் கனடாவின் நீர்நிலைகளில் வாழும் பழமையான மீன் தற்போது Toronto Zoo-வில்!

டைனோசர் காலத்திலிருந்தே கனடாவின் நீர்நிலைகளில் வாழ்ந்து வரும் ஒரு பழங்கால நன்னீர் மீன் இனமொன்று தற்போது Toronto Zoo-வில் புதிய வரவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Lake Sturgeon எனப்படும் இந்த நன்னீர் மீன்களை இனி Toronto Zoo-வின் Americas Pavilion பகுதியில் பொதுமக்கள் நேரில் பார்க்க முடியும்.

150 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த மீன், அதன் தோற்றமும் பரிணாம வரலாறும் காரணமாக “Living Fossil” – வாழும் படிவம் என்று அழைக்கப்படுகிறது.

கவசம் போன்ற உடல், சுறாவைப் போன்ற வால் மற்றும் நீரின் அடிப்பகுதியில் உணவைத் தேடி உண்ணும் தனித்துவமான வாய் அமைப்பு ஆகியவை இந்த மீனின் சிறப்பம்சங்களாகும்.

இவ்வளவு பெரிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும், ஒன்டாரியோவைச் சேர்ந்த பலர் இதுவரை இந்த மீனை நேரில் பார்த்ததே இல்லை.

ஒரு காலத்தில் Great Lakes பகுதியில் அதிகளவில் காணப்பட்ட இந்த மீன்களின் எண்ணிக்கை, வாழ்விட இழப்பு, நீர்நிலை மாசுபாடு, இடம்பெயர்வதற்கான தடைகள், ஊடுருவும் உயிரினங்கள், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல் காரணமாக வெகுவாகக் குறைந்தது. 

Great Lakes பகுதியைச் சேர்ந்த பல First Nations சமூகங்களின் மொழியில் இந்த மீன் “Na’me” என்று அழைக்கப்படுகிறது.

கடந்த நூற்றாண்டில் அழிவின் விளிம்புக்குச் சென்ற இந்தப் பழங்கால மீன் இனம், தற்போது பாதுகாப்பு முயற்சிகளின் மூலம் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.

First Nations சமூகங்களைப் பொறுத்தவரை, Sturgeon மீன் ஒரு முக்கியமான உணவு ஆதாரம் மட்டுமல்ல; பாரம்பரியமாக புனிதமான உறவாகவும் கருதப்படுகிறது.

இயற்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை கவனித்து, வசந்த காலத்தில் Sturgeon மீன்கள் முட்டையிடும் காலத்தைக் கணிக்கும் பாரம்பரிய அறிவும் அந்த சமூகங்களிடம் இருந்து வந்துள்ளது.

இந்தப் பழங்கால மீனை Toronto Zoo-வில் அறிமுகப்படுத்துவதன் மூலம், கனடாவின் நன்னீர் உயிரினப் பல்வகைமையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவற்றின் இயற்கை வாழிடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்த முடியும் என Zoo நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles