100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!

உலகில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, அறிவியலுக்கு இதுவரை தெரியாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான Bolivia-வின் மலைப்பகுதி மேகக்காடுகளில் வாழும் இந்தச் சிறிய காட்டுப்பூனைக்கு Leopardus tilcayo என்ற அறிவியல் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இதனை ஏற்கனவே Tilcayo என்றே அழைத்து வந்துள்ளனர்.

சுமார் 46 சென்டிமீட்டர் நீளமும், 1.4 கிலோ எடையும் கொண்ட இந்தப் பூனை, சாதாரண வீட்டுப் பூனையைவிட சிறியது. வெளிர் பழுப்பு நிற உடலில் சிறுத்தையைப் போன்ற ஒழுங்கற்ற கரும்புள்ளி வடிவங்கள் காணப்படுகின்றன.

முதலில் ஏற்கனவே அறியப்பட்ட ஒரு வகை சிறிய காட்டுப்பூனை என்றே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் பல தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 38 பூனைகளின் மரபணுக்களை ஆய்வு செய்தபோது, இது தனித்துவமான புதிய இனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

தற்போது இந்த இனத்தின் வாழ்க்கை முறை குறித்து மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. சிறிய எலிகளை உணவாக உட்கொள்ளலாம் என்றும், இரவு நேரங்களில் அதிகமாகச் செயல்படலாம் என்றும் ஆரம்பகட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், வன அழிப்பு, விவசாய விரிவாக்கம், தீ விபத்து, சுரங்க நடவடிக்கைகளால் இவை பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இனமாக இதனை வகைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

Related Articles

Latest Articles