றொரண்டோவின் (Toronto) புகழ்பெற்ற ‘Salsa on St. Clair’ திருவிழாவில் இடம்பெற்ற உயிராபத்தான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த திருவிழாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க பாதுகாப்பு தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல் (Safety Roundtable) ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், பல காயமடைந்த நிலையில், விழாவின் முக்கிய அனுசரணையாளரான TeleLatino Network (TLN) நிறுவனம் தனது ஆதரவை திரும்பப் பெறப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.
TLN அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதத்தில், லத்தீன் சமூக ஆர்வலர் மெர்லின் சொலானோ (Marilyn Solano) பேசுகையில், முகமூடி மற்றும் ஹூடிகளை அணிந்த நபர்களால் திருவிழாவில் அச்சுறுத்தல் நிலவியதாகவும், தனது குடும்பத்தினர் அச்சத்துடன் தப்பியதாகவும் தெரிவித்தார்.
றொரண்டோ துணை மேயர் மைக் கோலே (Mike Colle), துப்பாக்கி, வன்முறை மற்றும் இளையோர் குற்றங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தினார்.
முன்னாள் கொவிட்-19 தாக்க ஆராய்ச்சியாளர் இர்வின் ஸ்டுடின் (Irvin Studin), இளைஞர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதேவேளை, கனடாவின் புதிய பிணை சீர்திருத்தச் சட்டம் (Bail Reform) சாதகமான மாற்றத்தைக் கொண்டுவரும் என பொலிஸ் கண்காணிப்பாளர் ரியான் போர்ட் (Ryan Forde) நம்பிக்கை வெளியிட்டார்.
இருப்பினும், பாடசாலைகளுக்குள் பொலிஸார் அனுமதிக்கப்படாத சூழலில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கே வழிகாட்டல் தேவை என சொலானோ சுட்டிக்காட்டினார்.
தற்போது வரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
