கனடாவின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பெரும்பாலான கனடியர்கள் ஆதரித்த போதிலும், அமெரிக்கா அடிப்படையிலான AI கருவிகளைப் பயன்படுத்துவதற்கு 68 சதவீதத்தினர் விருப்பமின்மை தெரிவித்துள்ளனர்.
‘சாண்டிஸ் ஹெல்த்’ (Santis Health) மற்றும் ‘நானோஸ் ரிசர்ச்’ (Nanos Research) இணைந்து நடத்திய புதிய ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நோய்களைக் கண்டறிவதில் மருத்துவர்களுக்கு AI உதவுவதை 75 சதவீதமானோர் ஆதரிப்பதுடன், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இது உதவும் என நம்புகின்றனர்.
இருப்பினும், தங்கள் மருத்துவத் தகவல்கள் கனடாவிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள AI மாதிரிகளுக்கு அவை பயன்படுத்தப்படக் கூடாது என்றும் 80 சதவீத கனடியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், AI நிறுவனங்கள் சுகாதாரத் தரவுகளைக் கையாள்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என 86 சதவீதத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.