சீனாவுடன் கனடா ராணுவ பேச்சு – ஏன் இப்போது?- உறவில் திடீர் திருப்பம்!

பல ஆண்டுகளாக பதற்றம் நீடித்த கனடா சீனா உறவில் தற்போது புதிய நகர்வு ஏற்பட்டுள்ளது.

கனடா மற்றும் சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நேரடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையிலான ஐந்தாவது பாதுகாப்பு ஒருங்கிணைப்பு உரையாடல் கனடாவில் நடைபெற்றதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் முதலில் அறிவித்தது. பின்னர் கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறையும் இந்த சந்திப்பு நடைபெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் வெளிப்படையான மற்றும் விரிவான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக Beijing தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் நடைமுறை ரீதியான தொடர்புகளையும் புரிந்துணர்வையும் அதிகரிப்பது குறித்தும் பேசப்பட்டதாக சீனா கூறியுள்ளது.

ஆனால் கனடா இந்த சந்திப்பை பெரிய அளவில் பொதுவெளியில் அறிவிக்கவில்லை.

இது அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும் கூட்டம் என்றும், இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் நோக்கம் கனடாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதுதான் என்றும் Ottawa தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த நகர்வு கனடாவில் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக Conservative தரப்பினர், சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் எந்த முயற்சியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

தாய்வான் நீரிணை பகுதியில் கனடிய கடற்படைக் கப்பல்கள் பயணித்தமை உள்ளிட்ட பல விவகாரங்கள் கடந்த காலங்களில் இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், பிரதமர் Mark Carney தலைமையிலான அரசு சீனாவுடனான உறவை மேம்படுத்த முயற்சித்து வரும் நேரத்தில் இந்த ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

கனடா-சீனா உறவில் இது புதிய ஆரம்பமா, அல்லது பதற்றத்தை குறைப்பதற்கான ஒரு தொடர்பு வாயில் மட்டுமா? என்பதை அடுத்தடுத்த நகர்வுகளே தீர்மானிக்கும்.

Related Articles

Latest Articles