கனடாவின் லொட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசுத் தொகையான 90 மில்லியன் கனடிய டொலரை ஒருவர் வென்றுள்ளார்!
யார் அந்த அதிர்ஷ்டசாலி? என்ற எதிர்பார்ப்பு தற்போது கனடா முழுவதும் அதிகரித்துள்ளது.
கனடாவில் பிரபலமான Lotto Max லொட்டரியின் முதல் பரிசு, தொடர்ச்சியாகப் பல குலுக்கல்களில் யாருக்கும் கிடைக்காத நிலையில், அதன் பரிசுத் தொகை 90 மில்லியன் டொலராக உயர்ந்திருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற Lotto Max குலுக்கலில், இந்தப் பிரம்மாண்டமான பரிசுத் தொகைக்கான வெற்றிச் சீட்டு தெரிவாகியுள்ளது.
குறித்த வெற்றிச் சீட்டு கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக Ontario Lottery and Gaming Corporation எனப்படும் OLG நிறுவனம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இது கனடாவின் லொட்டரி வரலாற்றில் இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய Jackpot வெற்றியாகப் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் Lotto Max விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அதிகபட்ச Jackpot பரிசுத் தொகை 80 மில்லியனிலிருந்து 90 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து, முதன்முறையாக அந்த முழுத் தொகைக்கும் வெற்றிச் சீட்டு தெரிவாகியுள்ளது.
இதற்கு முன்னர், ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள், 80.4 மில்லியன் டொலர் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய குலுக்கலில் வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
90 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை உரிய முறையில் கோருவதற்காக வெற்றியாளர் முன்வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஒரே ஒரு லொட்டரி சீட்டு… 90 மில்லியன் டொலர் பரிசு! கனடாவில் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த அதிர்ஷ்டசாலி யார் என்பது விரைவில் தெரியவரலாம்!
