அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) பெற்றுள்ள மாபெரும் வெற்றி, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை கனடாவில் வாழும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கனடாவுடனான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தியதோடு, கனடிய பொருட்கள் மீது 50% வரை வரிகளை விதித்திருந்தார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளாலும், கடுமையான குடியேற்றக் கொள்கைகளாலும் கனடாவில் வசிக்கும் பல அமெரிக்கர்கள் கவலையடைந்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதனால் டிரம்பின் அதிகார வரம்புகள் கட்டுப்படுத்தப்படும் என்றும், வர்த்தக வரிகள் தொடர்பான பிணக்குகள் குறைக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகள் படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்பும் என்றும் போமன்வில் (Bowmanville) பகுதியைச் சேர்ந்த லூசியா லாயிட் (Lucia Lloyd) மற்றும் பீட்டர்பாரோவைச் (Peterborough) சேர்ந்த கேட் கிச்சன் (Kate Kitchen) போன்ற கனடாவாழ அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்ட விரிசல்களைச் சரிசெய்து முழுமையான ஜனநாயக மற்றும் வர்த்தக உறவை மீட்டெடுக்க இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என மேற்கத்திய பல்கலைக்கழகத்தின் (Western University) அரசியல் ஆய்வாளர் மெத்யூ லெபோ (Matthew Lebo) கருத்து தெரிவித்துள்ளார்.
