கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அது இப்போது அரசியல் மற்றும் வர்த்தகத்தைத் தாண்டி, வீதி பெயர்கள் முதல் மக்கள் வாங்கும் பொருட்கள், சுற்றுலா செல்லும் நாடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஒட்டாவாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் “Trump Avenue” என்ற வீதியின் பெயரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கனடாவுக்கு எதிரான அண்மைய நடவடிக்கைகளால் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிப்பது, அமெரிக்காவுக்கான சுற்றுலாவை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் பல கனேடியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவின் பிரபலமான Chapman’s Ice Cream நிறுவனம், அமெரிக்காவில் இருந்து வாங்கும் மூலப்பொருட்களை பெருமளவில் குறைக்க முடிவு செய்துள்ளது.
2027 நடுப்பகுதிக்குள் அமெரிக்க மூலப்பொருட்களின் பயன்பாட்டை 70 சதவீதம் வரை குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் 10.6 சதவீதம் குறைந்துள்ளதுடன், அங்கு செலவிடப்பட்ட சுற்றுலாப் பணமும் 13.6 சதவீதம் சரிந்துள்ளது.
மேலும், அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்திய பிரதமர் Mark Carney-யின் முடிவுக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றும் கூறுகிறது.










