அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் (Howard Lutnick) பேச்சுவார்த்தைக்கு அழைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கனடா, அமெரிக்கா, மெக்சிகோ இடையே புதுப்பிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச, ஃபோர்ட் மற்றும் கனடிய நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங் (Dominic LeBlanc) வொஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
கனடியன் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு விதித்த வரியை இரட்டிப்பாக்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், முதல்வர் டக் ஃபோர்ட் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
வர்த்தக முரண்பாடுகள் மேலும் வலுக்காமல், பிரச்சினைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஃபோர்ட் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க், மிச்சிகன், மின்னசோட்டா (New York, Michigan and Minnesota), மாநிலங்களில் 15 லட்சம் வீடுகள் மற்றும் தொழில்கள் ஒன்டாரியோவில் இருந்து மின்சாரம் பெறுகின்றன . ஒன்டாரியோ அரசாங்கம், இந்த மின்சார வரி மூலம் தினசரி $300,000 – $400,000 வருமானம் கிடைக்கும் என கணித்தது.