ஹாமில்டன் (Hamilton) நகரில் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவர், கைவிலங்குடன் தப்பியோடியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை 1:00 மணியளவில் Main Street East மற்றும் Grant Avenue பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, சுல்தான் அல்டார்விஷ் (Sultan Aldarwish) என்ற 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடை ஒன்றில் திருடிய குற்றச்சாட்டில் (Shoplifting charges) பிணையில் வந்த அவர், அதன் நிபந்தனைகளை மீறியதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை காரணமாகக் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரால் கைவிலங்கிடப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரைத் தேடும் பணியில் மோப்ப நாய்ப் பிரிவினர் உள்ளிட்ட பல அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர் கடைசியாக Barton Street East மற்றும் Leeming Street பகுதியில் காணப்பட்டதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக ஹாமில்டன் (Hamilton) பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










