அடுத்த வாரம் முதல் அமெரிக்கா அமுல்படுத்தவுள்ள வாகன வரிகளை நீக்கிக் கொள்வதற்கோ, அதற்கு விலக்களிக்கவோ இணக்கம் காணப்படவில்லை என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
புதன்கிழமை இரவு 11 மணிக்கு ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை 25 நிமிடங்கள் நீடித்ததாக ஃபோர்ட் கூறினார்.
இந்த உரையாடலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புதிய உத்தரவு பற்றிய விவரங்களை லூட்னிக் விளக்கியுள்ளார்.
வாகன இறக்குமதி வரிகள் காரணமாக எந்தவொரு வாகன உற்பத்தித் தொழிற்சாலையும் மூடப்படாது என்று லூட்னிக் தெரிவித்ததாக ஃபோர்ட் கூறினார். ஆனால், இதில் எந்தளவு உண்மையுள்ளது என்பது தனக்குத் தெரியாது என்றும் டக் போர்ட் தெரிவித்தார்.
எனினும், இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்றும் ஃபோர்ட் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து ஏப்ரல் 2ஆம் திகதி வரை காத்திருந்த பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவில் தயாரிக்கப்படும் வாகனங்களில் பெரும்பாலும் 50% அல்லது அதற்கு மேற்பட்ட அமெரிக்க உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், பெரும்பாலான வாகனங்கள் வரி விதிப்பிலிருந்து விடுபடக்கூடும்.
அவரது உரையாடலில், ஏப்ரல் 2 அன்று மேலும் என்ன வகையான வரிகள் அறிவிக்கப்படலாம் என லூட்னிக்கிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் அறியவில்லை என பதிலளித்ததாகவும் ஃபோர்ட் கூறினார்.
இன்று, ஒன்டாரியோவில் ஆட்டோ தொழில் துறையில் சுமார் 100,000 பேர் பணியாற்றுகிறார்கள். வரி பாதிப்புகள் ஆட்டோ தொழிற்சாலைகளை முடக்காமல் இருக்க, முக்கியமான கானடியன் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் திங்கள் கிழமையன்று ஆலோசனை நடத்த இருப்பதாக ஃபோர்ட் தெரிவித்தார்.