றொரண்டோவில் அதிர்ச்சி – பொலிஸ் அதிகாரி மீது கார் மோதிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு!

கனடாவின் East York பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை நிறுத்த முயன்ற போலிஸ் அதிகாரி மீது காரை மோதிவிட்டு தப்பிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை அதிகாலை 1:04 மணியளவில் Donlands Avenue மற்றும் O’Connor Drive சந்திப்பில் கார் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த போலிஸார் காரை நிறுத்த முயன்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த திருடப்பட்ட காரை ஓட்டிவந்த ஓட்டுநர், போலிஸ் அதிகாரி மீது காரை மோதிவிட்டு தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அதிகாரி Leaside Bridge பகுதியில் மீட்கப்பட்டு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, Mortimer மற்றும் Donlands பகுதியில் சந்தேகத்திற்குரிய காரையும், காயம் அடைந்திருந்த 12 வயது ஓட்டுநரையும் போலிஸார் மீட்டனர்.

காரில் 12 மற்றும் 13 வயதுடைய மேலும் இரு சிறுவர்கள் இருந்தனர். தப்பியோடிய 12 வயது சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் மீது கொலை முயற்சி, போலிஸ் அதிகாரி மீது தாக்குதல், கார் திருட்டு, விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இந்த சம்பவம் குறித்து SIU (Special Investigations Unit) எனப்படும் சுதந்திரமான சிவில் அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

Related Articles

Latest Articles