மிசிசாகாவில் (Mississauga) உள்ள கிளார்க்சன் கோ (Clarkson GO) ரயில் நிலையத்திற்கு அருகே நபர் ஒருவர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனால், லேக்ஷோர் வெஸ்ட் (Lakeshore West) பாதையிலான ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீல் (Peel) பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, லோர்ன் பார்க் சாலை (Lorne Park Road) மற்றும் பிர்ச்வியூ டிரைவ் (Birchview Drive) பகுதிக்கு அருகில் மாலை 5:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த விசாரணைகள் நடந்து வருவதால், அந்தப் பகுதியில் உள்ள மூன்று ரயில் பாதைகளில் ஒன்று மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதாக கோ டிரான்சிட் (GO Transit) தெரிவித்துள்ளது.
இதனால், கிழக்கு நோக்கிய (Eastbound) ரயில் சேவைகள் நீண்ட நேரம் தாமதமடைய வாய்ப்புள்ளது.
அதேவேளை, மேற்கு நோக்கிய (Westbound) ரயில் சேவைகள் தற்காலிகமாக 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளை முடித்து அந்தப் பகுதியை சீர்செய்யும் வரை, ரயில் சேவைகளில் ரத்துகளும் மாற்றங்களும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.










