டொரண்டோவில் மத போதனை வகுப்பில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மதப் போதகவர் ஒருவரை யோர்க் பிராந்திய பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
பிக்கரிங் மற்றும் மார்கம் நகரங்களில் உள்ள வீடுகளில் ஆன்மிக வகுப்புகள் நடத்திய 44 வயது மதப் போதகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2021முதல் 2024 அக்டோபர் வரை ஆறு முறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் முறையிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் ஒருவர் தன்னை 7 முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முறையிட்டுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எவையும் இன்னமும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்று யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மதப் போதகரினால் பாலியல் ரீதியாக வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் முறையிடலாம் என்றும் பாலியல் வன்கொடுமை முறைப்பாடுகளுக்கு காலவரையறை இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.