ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் திறந்தவெளி பொது நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த மதுபானங்களைக் கொண்டு வர அனுமதிக்கும் புதிய திட்டத்தை முதல்வர் டக் போர்ட் (Doug Ford) அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி, நகராட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார நிகழ்வுகள், விவசாயிகள் சந்தை (Farmers’ markets), திரைப்படத் திரையிடல்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் மதுபானங்களை எடுத்துச் செல்லலாம்.
தற்போது விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த ‘டெயில்கேட்‘ (Tailgate) அனுமதி, இனி சமூக நிகழ்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
உள்ளக சுற்றுலாவை மேம்படுத்தவும், நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் செலவுகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் Doug Downey தெரிவித்துள்ளார்.
இதற்காக நகராட்சிகள் பொது இடங்களில் மது அருந்துவதை அனுமதிக்கும் துணைச் சட்டங்கள் (Bylaws) இயற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
அதேபோல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கான சிறப்பு அனுமதியை AGCO (Alcohol and Gaming Commission of Ontario) மூலம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.










