டொரொன்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், 6 வயது குழந்தை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.15 மணியளவில், Bremner Boulevard மற்றும் Lower Simcoe Street சந்திப்புக்கு அருகிலுள்ள Roundhouse Park பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Toronto Police தெரிவித்துள்ளது.
பூங்காவில் உள்ள ரயில்களில் 6 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆண் ஒருவர் குழந்தையை அணுகி பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனை கவனித்த குழந்தையின் பெற்றோர் அந்த நபரை எதிர்கொண்டபோது, அவர் மீண்டும் குழந்தையை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர் என்றும், சுமார் 5 அடி 6 அங்குல உயரம், சராசரி உடல்வாகு கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை அடையாளம் காண உதவும் வகையில் அவரது படங்களையும் Toronto Police வெளியிட்டுள்ளது.
