Oshawa விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காணாமல் போன 73 வயது விமானி, பல நாட்கள் நீடித்த தீவிர தேடுதலுக்குப் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
73 வயதான அனுபவம் வாய்ந்த விமானி David Douglas, கடந்த வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 14ஆம் திகதி காலை சுமார் 8.30 மணியளவில் Oshawa Executive Airport-இல் இருந்து தனது சிறிய, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
அவர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் Oshawa விமான நிலையத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரும்பாததால் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், Wolf Lake-இல் விமானத்தின் சிதைவுகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த நேரத்தில் விமானி கண்டுபிடிக்கப்படவில்லை.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், விமானத்தின் மீதிப் பகுதி Wolf Lake-இன் நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனுடன் காணாமல் போன விமானியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக Ontario Provincial Police தெரிவித்துள்ளது.
David Douglas மட்டுமே அந்த விமானத்தில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நீடித்த தேடுதலின் முடிவில் இந்த துயரச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
