நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில், 30 கனடியர்கள் மற்றும் கனடாவின் நிரந்தர குடியிருப்பாளர்கள் காணாமல் போயுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் சீன அதிகாரிகளின் தகவல்களின்படி, 390-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 1,400-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
கனேடிய அரசாங்கம் நேபாளத்தில் காணாமற்போன கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் என மொத்தம் 30 பேருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
காணாமல் போன கனடியர்களின் நிலையை உறுதிப்படுத்துவதற்காக ஐந்து கனேடிய தூதரக அதிகாரிகள் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை தொடர்புகொள்வது கடினமாக இருப்பதாகவும் கனடாவின் Global Affairs தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்களில் பலர் திபெத்தில் உள்ள புனிதமான கைலாஷ் மலைக்கு யாத்திரை சென்றவர்கள் என நம்பப்படுகிறது.
இந்த பேரழிவின்போது திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் வெறும் அரை மணி நேரத்தில் சுமார் 9 மீட்டர் வரை உயர்ந்ததாக காலநிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










