செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை கனடா முன்னெடுக்க வேண்டும் – ஆய்வாளர் மரியோ அருள்தாஸ் வலியுறுத்தல்

ஒட்டாவா: இலங்கையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது தற்செயலான போரின் எச்சம் அல்ல. மாறாக தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சான்று என லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழக ஆய்வாளரும் ‘த நோர்த் ஈஸ்டர்ன்’ இதழின் முதன்மை ஆசிரியருமான டொக்டர் மரியோ அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஆய்வாளர், டொக்டர் மரியோ அருள்தாஸ்,

”செம்மணி என்பது ஏதோ ஒரு தொலைதூரப் பகுதி அல்ல; மாறாக அது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் சின்னம் என்றும், அரசு வன்முறையின் தீர்க்கப்படாத தடயம்.

மனிதப் புதைகுழிகள் போரின் தற்செயல் எச்சங்கள் அல்ல. மனிதப் புதைகுழிகள் என்பவை போரின் எதேச்சையான விளைவுகள் அல்ல; மனித உயிர்களை அழித்து உண்மையை மண்ணுக்குள் புதைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தையே அவை வெளிப்படுத்துகின்றன. 1995-இல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பிறகு, அப்பகுதி கடுமையான ​ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், 1996-ஆம் ஆண்டு தேர்வை எழுதிவிட்டு திரும்பிய 18 வயது மாணவி கிருஷாந்தி குமாரசாமி, செம்மணி ராணுவச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், 16 வயது தம்பி மற்றும் ஒரு பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டனர். அன்று யாழ்ப்பாணத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களால் கிருஷாந்தி வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

வழக்கின் விசாரணையின்போது, குற்றவாளிகளாகக் காணப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், செம்மணியிலும் பிற இடங்களிலும் ராணுவத்தின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியாகியுள்ளது.

1999-இல் அப்போதைய அகழ்வாராய்ச்சியில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசு போதிய டி.என்.ஏ ஆய்வுகள் செலவு அதிகம் எனக் கூறி, சர்வதேச தடயவியல் உதவிகளை மறுத்து வழக்கை முடக்கியது.

ஆனால், கடந்த ஆண்டு அந்தப் பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின்போது மீண்டும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான அகழ்வாராய்ச்சியின் முடிவில் மட்டும் 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், சித்திரவதைக்குள்ளான தடயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள், பள்ளிப் பைகள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளுடன் மீட்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசுக்கு இந்த விவகாரத்தில் நீதியை வழங்கும் அரசியல் விருப்பமோ அல்லது தடயவியல் நிபுணத்துவமோ கிடையாது. பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) போன்ற கொடூர சட்டங்கள் வழியாகவே இத்தகைய தன்னிச்சையான கைதுகளும் படுகொலைகளும் தசாப்தங்களாக அரங்கேற்றப்பட்டன. தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்படும் சட்டங்களும் ஜனநாயக வெளியை மேலும் முடக்குவதாகவே அமைந்துள்ளன.

இத்தகைய கட்டமைப்பு ரீதியான அடக்குமுறைகள் தொடரும் சூழலில், இலங்கை தன் சொந்தப் படைகளுக்கு எதிராக ஒருபோதும் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்காது என்பது வரலாற்று உண்மை.

தமிழ் மக்களின் நீதிப் போராட்டத்தில் கனடா பல துணிச்சலான வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது அதன்படி, மே 18-ஐ ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக’ கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இரண்டு முன்னாள் இலங்கை ஜனாதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது கனடா இலக்கு வைக்கப்பட்ட தடைகளை (Sanctions) விதித்தது.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச அளவிலான சுயாதீன விசாரணைகளை வலியுறுத்துவதிலிருந்து விலகி, இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு கனடாவின் கொள்கை மாறியிருப்பது ஏமாற்றமளிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சூழலில், கனடா பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது:

சர்வதேச நியாயாதிக்கத்தை நடைமுறைப்படுத்துதல்: நிர்வாகத் தடைகளோடு நின்றுவிடாமல், கனேடியச் சட்டத்தின் கீழான ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சட்டத்தை’ (Crimes Against Humanity and War Crimes Act) பயன்படுத்தி, சர்வதேச நியாயாதிக்கத்தின் (Universal Jurisdiction) அடிப்படையில் குற்றவாளிகள் மீது கிரிமினல் விசாரணைகளைத் தொடங்க வேண்டும்.

செம்மணிக்கு சர்வதேச மேற்பார்வை: செம்மணி அகழ்வாராய்ச்சி மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு முழுமையான சர்வதேச மேற்பார்வையும் சுயாதீன வழிமுறைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுடனான தூதரக மற்றும் சமூகத் தொடர்புகளை வடகிழக்குப் பகுதியில் நேரடியாகவும் விரிவாகவும் கனடா முன்னெடுக்க வேண்டும்.

நீதிக்கான பாதையில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் முன்னெடுக்கும் உண்மை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் கனேடிய அரசாங்கம் உறுதியுடன் துணை நிற்க வேண்டும் என்ற அறைகூவலுடன் உரை நிறைவடைந்தது.

Related Articles

Latest Articles