ஒட்டாவா: இலங்கையில் செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை ஓராண்டுக்குள் இரட்டிப்பாகியுள்ள சூழலில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்டு என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவானிதா நாதன் (Juanita Nathan) வலியுறுத்தியுள்ளார்.
கனடா நாடாளுமன்ற வளாகத்தில் (Parliament Hill) செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி கோரி நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் நிறைவுரையாற்றிய அவர், கட்சி எல்லைகளைக் கடந்து சர்வதேச மனித உரிமை அநீதிகளுக்கு எதிராக கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கிருஷாந்தியின் கதையும் தொடரும் நீதிக்கான நகர்வும்
குறுகிய கால அழைப்பிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜுவானிதா நாதன்:
“இத்தலைப்பு எனக்கு மிகவும் தனிப்பட்ட ரீதியில் நெருக்கமானது. தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளும் வகையில் கிருஷாந்தி குமாரசாமியின் கதையையும், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் அநீதிகளையும் விரிவாக எடுத்துரைத்த ஆய்வாளர் டாக்டர் மரியோ அருள்தாஸுக்கு எனது நன்றிகள்.
லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் (SOAS University of London) மோதல், உரிமைகள் மற்றும் நீதிக்கான முதுமுனைவர் பட்ட ஆய்வாளராகவும், ‘த நார்த் ஈஸ்டர்ன்’ சஞ்சிகையின் முதன்மை ஆசிரியராகவும் அவர் மேற்கொண்டுவரும் அரிய பணிகள், நீதிக்கான நகர்வைச் சரியான திசையை நோக்கி முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றன” என்று பாராட்டினார்.
அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், பாரிய கொடுமைகளுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவது என்பது கனேடிய நாடாளுமன்றமும் அனைத்துக் கட்சிகளும் போற்றிப் பாதுகாக்கும் பொதுவான மதிப்பீடு என்றார்.
